சாம்பியன்ஸ் டிராபி | மழையால் ரத்தான ஆட்டம்... அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, அதிரடியாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டுகளும், ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் மேத்யூ ஷார்ட் ஆகிய இருவரும் இறங்கிறனர்.
இதில் மேத்யூ ஷார்ட் 20 ரன்கனில் வெளியேறினார். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கினார். மறுபுறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி 12.5 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 109 ரன்கள் எடுத்திருந்த போது அங்கு திடீரென மழை பெய்தது.
இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதையடுத்து குரூப் பி-யில் 4 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.