லாகூரில் சாம்பியன் டிராபி இந்தியா- பாகிஸ்தான் போட்டி! பாகிஸ்தானின் முடிவுக்கு இந்தியா என்ன சொல்லும்?
லாகூரில் சாம்பியன் டிராபி இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என பாகிஸ்தான் அறிவித்துள்ள நிலையில், அந்த முடிவுக்கு இந்தியா என்ன சொல்லும் எனக் கேள்வி எழுந்துள்ளது.
"மினி உலக கோப்பை" என அழைக்கப்படும் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி 1998-ம் ஆண்டு வங்காளதேசத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் தென்ஆப்பிரிக்கா கோப்பையை கைப்பற்றியது. இதுவரை 8 போட்டித் தொடர் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் கோப்பையை வென்றது. 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியை 8 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் முதல் தடவையாக நடத்துகிறது. பாகிஸ்தான் நாட்டில் நடைபெறுவதால் அந்த அணியே அட்டவணையை அறிவிக்கும். அந்த அட்டவணையை ஐசிசி-யிடம் பரிந்துரைக்கும். ஐசிசி மற்றும் மற்ற நாடுகள் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றால் அந்த அட்டவணைப்படி போட்டி நடைபெறும்.
ஒருநாள் போட்டித் தரவரிசையில் டாப் 8 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. வெஸ்ட்இண்டீஸ், இலங்கை ஆகியவை தகுதிபெறும் வாய்ப்பை இழந்தன. இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லுமா? என்பது உறுதியில்லை. மத்திய அரசின் அனுமதியை பொறுத்துதான் இருக்கிறது. இந்த தொடருக்கு இந்திய அணியை தவிர மற்ற அணிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டனர். இந்தியா பங்கேற்க மறுத்தால் கடந்ந காலங்களை போல இந்தியா ஆடும் போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படும். 2008-ம் ஆண்டு ஆசிய கோப்பைக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.