மீட்புப் பணியை ஆய்வு செய்த மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஸ்ணவ், எல்.முருகன்!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியை, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் மற்றும் ரயில்வே இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி செல்லக்கூடிய பிரதான சாலை முழுவதுமாக வெள்ள நீரில் சூழப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ஜேசிபி வாகனத்தில் மீட்கப்பட்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வெள்ளநீர் தேங்கி இருப்பதால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்றாலும் அனைத்து மக்களுக்கும் இன்னும் உதவிகள் சென்று சேராத நிலையே நீடிக்கிறது.
பெருமழை பெய்ததால் பல பகுதிகளில் ரயில் பாதைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் பாய்ந்து ஓடியது. இதனால் இந்த பகுதிகளில் ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் திடீர் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் அபாயகரமான அளவில் ஓடியது. இதன் காரணமாக இருதினங்களாக திருச்செந்தூரில் இருந்து புறப்பட்ட செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக ரயில் பயணிகள் ரயிலிலும் அருகில் உள்ள பள்ளியிலும் மழை வெள்ளம் குறையும் வரை காத்திருக்க நேரிட்டது. டிசம்பர் 18 அன்று அதிக மழை வெள்ளம் காரணமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையம் தனித்தீவு போல ஆகிவிட்டது. தேசிய மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் கூட ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்திற்கு சென்று சேர இயலவில்லை.
இந்நிலையில், அப்பகுதியில் நடைபெற்ற மீட்புப்பணி குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ், மற்றும் ரயில்வே இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் டெல்லியில் இருந்து காணொலி மூலம் பார்வையிட்டனர். அதனை எல்.முருகன் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டதாவது, “ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் போர் அறையை பார்வையிட்டார். உடனே போர் அறையில் இருந்து அதிகாரிகள் நிலைமையை ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.
தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் இந்திய இரயில்வே குழுவினர் ஸ்ரீவைகுண்டம் நிலையத்தில் மீட்பு பணிகளை தொடங்கினர். ரயில்வே ஊழியர்களால் கொண்டுவரப்பட்ட மற்றும் விமானத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவுப் பொருட்கள் பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது
ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 100 பயணிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்களுடன் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளது. மேலும் வேலூரில் பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, அவை வாஞ்சி மணியாச்சி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு ரயில் மூலம் அனைத்து பயணிகளையும் சென்னைக்கு அழைத்துச் செல்ல வழி செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.