எனது பதவியை பறித்ததன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது - மஹுவா மொய்த்ரா பேட்டி!
எனது பதவியை பறிப்பதன் மூலம் அதானி விவகாரத்தை மறைக்க முடியாது என பதவிநீக்கம் செய்யப்பட்ட எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகார் அளித்தார். இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிர்லா பரிந்துரைத்தார். அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இதுகுறித்து விசாரித்து வந்தது.
தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தது. அந்த அறிக்கையை குழுவின் தலைவர் வினோத் குமார் சோன்கர் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமளி காரணமாக பிற்பகலுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் அந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, மக்களவையில் இருந்து திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மஹுவா மொய்த்ரா தகுதிநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.
"பெண்கள், சிறுபான்மையினர் என அனைவரின் உரிமையையும் மத்திய அரசு பறிக்கிறது. முழுமையான விசாரணை நடத்தப்படாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதானி என்ற ஒரு நபருக்காக மத்திய அரசு இயங்கி வருகிறது. மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. எனக்கு 49 வயதாகிறது, அடுத்த 30 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாஜகவை எதிர்த்து போராடுவேன்.
வெளியேற்றும் அதிகாரம் நெறிமுறைக் குழுவிற்கு இல்லை. இது பா.ஜ.,வின் முடிவிற்கான ஆரம்பம். எனது பதவியை பறித்து வாயை அடைப்பதன் மூலம், அதானி விவகாரத்தை மறைக்க முடியாது. அதானி மீதான ரூ.13,000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் புகாரில், சிபிஐயும், அமலாக்கத்துறையும் என்ன செய்தது. சிபிஐ நாளை என் வீட்டிற்கு அனுப்பப்படும். அடுத்த ஆறு மாதத்திற்கு என்னை கைது செய்வார்கள். இது நிச்சயம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.