வரி பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம் | 8 மாநில முதலமைச்சர்களுக்கு #Siddaramaiah கடிதம்!
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்களுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் வரிப் பங்கீட்டுப் பாரபட்சம் அல்லது மாநிலங்கள் வசூலிக்கும் வரிப் பங்கைத் திருப்பித் தருவதில் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பியுள்ளன.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி, டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய அரசுக்கு எதிராக கர்நாடக அரசு ‘டெல்லி சலோ’ ‘எனது வரி எனது உரிமை’ என்ற பெயரில் போராட்டம் நடத்தியது. மறுநாள், கேரள அரசும் டெல்லியில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் தங்களின் வரிப் பங்கை செலுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாகக் கண்டித்ததையடுத்து, சிறிய அளவிலான வரிப் பங்கீட்டை மத்திய அரசு வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசுக்கும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின், முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியும், மத்திய அரசு நமது வரிப் பங்கை சரியாகச் செலுத்தவில்லை என்று கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்களுக்குக் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“மத்திய அரசின் அநியாயமான வரி பகிர்வு குறித்து கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநில முதலமைச்சர்ளுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
“கர்நாடகா உட்பட மாநிலங்கள் அதிக உள்நாட்டு உற்பத்தியை (ஜிஎஸ்டிபி) கொண்ட மாநிலங்கள், அவற்றின் பொருளாதார செயல்திறனில் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. இந்த மாநிலங்கள் குறைந்த வரி ஒதுக்கீடு பெறுகின்றன. இது கூட்டாட்சி பலவீனப்படுத்துகிறது. அதிக வரி செலுத்தும் மாநிலங்களின் நிதி சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
“இந்தப் பிரச்னைகள் குறித்து மத்திய அரசிடம் விவாதிப்பது குறித்து விவாதிக்க பெங்களூருவில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்குமாறு அண்டை மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.