#BorisStorm - வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்ட மத்திய ஐரோப்பா... உயிரிழப்பு 15ஆக உயர்வு!
போரிஸ் புயலால் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் செக் குடியரசு, போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியா, ஆஸ்திரியா போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு குடிபெயர்ந்துள்ளனர். செக் குடியரசில் இரண்டு தசாப்தங்களுக்கு பின் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த போரிஸ் புயல்.
பல ஆறுகளில் அபாய அளவைக் கடந்து வெள்ளம் பாய்வதால், ஊருக்குள் நீர் புகுந்து பல பகுதிகள் மூழ்கியுள்ளன. இந்த நிலையில், போலந்தில் மழை வெள்ள பாதிப்புகளை தேசியப் பேரிடராக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த வெள்ளத்தில் ரோமானியாவில் 6 பேரும், ஆஸ்திரியாவில் 3 பேரும், போலந்தில் 5 பேரும், செக் குடியரசில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செக் குடியரசில் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பாவில் கனமழை பாதிப்புகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.