அமெரிக்காவில் #Vettaiyan கொண்டாட்டம்...பிரம்மாண்ட கார் அணிவகுப்புடன் கோலாகலம்!
நாளை உலகமெங்கும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் வெளியாக உள்ளநிலையில், அதனை வரவேற்கும் விதமாக அமெரிக்காவில் பிரம்மாண்ட கார் அணிவகுப்பு நடைபெற்றது.
ரஜினியின் 170-வது படமான ‘வேட்டையன்’ -ஐ ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் வேட்டையன் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் நாளை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில் வேட்டையன் ரிலீஸை முன்னிட்டு, அமெரிக்காவில் பிரம்மாண்ட கார் அணிவகுப்பு நடைபெற்றது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், ரஜினி ரசிகர் மன்ற தலைவர் ‘ரஜினி வாசு’ ஏற்பாட்டில் 100-க்கும் மேற்பட்ட கார்களில் வேட்டையன் பேனர்களோடு, பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை புதுக்கோட்டை ரஜினி ரசிகர் மன்ற தலைவரும், அமெரிக்க தொழிலதிபருமான கே.கே. முருகு பாண்டியன் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் 100 அடி கட் அவுட் திறந்து வைக்கப்பட்டது.
இதனை கேக் வெட்டி, ஆடல், பாடலுடன் பிரம்மாண்டமாக கொண்டாடினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும், டெக்சாஸ் ரசிகர் மன்ற தலைவர் ரஜினி வாசுவும், நிர்வாகிகளும் செய்திருந்தனர். இதில் லைகா நிறுவனத்தைச் சேர்ந்த வருண், தயாரிப்பாளர் பாபி பாலசந்தர், ரசிகர் மன்ற நிர்வாகிகள் செந்தில், அருண், மகேஷ், அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.