உக்ரைனில் போர் நிறுத்தம்?.. உலகத் தலைவர்கள் ஆலோசனை!
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தில் இன்று (ஜூன் 15) தொடங்கியது.
உக்ரைன் மீது கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்த ரஷ்யா, அந்த நாட்டின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதியில் ரஷ்ய மொழி பேசுவோரைப் பெரும்பான்மையாகக் கொண்ட டொனட்ஸ்க், கெர்சான், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களின் கணிசமான பகுதிகளை உள்ளூர் கிளர்ச்சிப் படையினருடன் இணைந்து கைப்பற்றியது.
அந்த 4 பிரதேசங்களில் இன்னும் உக்ரைன் படையினரிடம் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யாவும் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. கடந்த 28 மாதங்களாக ரஷ்யாவும், உக்ரைனும் பரஸ்பரம் நடத்திவரும் வான்வழித் தாக்குதல்களில் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இதையடுத்து, உக்ரைனில் போர் நிறுத்தம் உடனடியாக ஏற்படவும், அமைதி நிலவவும், தேவையான சமாதான நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுத்துள்ளன. இந்த நிலையில், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்த சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தில் இன்று(ஜூன் 15) தொடங்கியது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்பட பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, துருக்கி, ஹங்கேரி ஆகிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இதில் போர்நாடான ரஷ்யாவும், சீனாவும் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது. இந்திய தரப்பில் பிரதிநிதிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.