சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றம்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து அதிமுகவினர் தினமும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கடும் அமளியில் ஈடுபட்டதுடன், சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, சட்டப் பேரவையின் 4-ம் நாளான இன்றும் (ஜூன் 26) அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கும்படி சட்டப் பேரவைக்கு கருப்பு உடை அணிந்து வந்தனர். சட்டப்பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்தை நடத்த பேரவைத் தலைவர் அப்பாவு முயன்றார். அப்போது அதிமுக உறுப்பினா்கள் பேரவைத் தலைவரின் இருக்கை முன்பாக நின்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்ய பேரவைத் தலைவர் முயன்றார்.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினரை சபாநாயகர் அப்பாவு வெளியேற்ற உத்தரவிட்டார். பின்னர், பேரவை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் அதிமுக உறுப்பினர்களை இந்த கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யக் கோரி அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதனையடுத்து, அதிமுகவினரை நடப்பு கூட்டத் தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுக முனைப்பாக இருப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
“சமீபகாலமாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. நேற்று முன்தினம் கூட பாமகவை சேர்ந்த ஜி.கே.மணி சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என கூறினார். சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடும் கூட. ஆங்கிலேயர் ஆட்சியின் இருந்து மத்திய அரசால் தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பை சட்டத்தின் படி மத்திய அரசு தான் எடுக்க வேண்டும்.
2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முதன்முறையாக கொரோனாவை காரணம் காட்டினார்கள். அதன் பின்னும் எடுக்கவில்லை. இது கடமையை புறக்கணிக்கும் செயல். மக்கள்தொகை கணக்கெடுப்புடன், சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என கடந்த முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தேன். மத்திய அரசு உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் அத்துடன் சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்”
இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பேசினர். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேறியது.