Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Crime : பழைய நாணயம், ரூபாய் நோட்டுகளுக்கு பணம் - மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனம்!

08:22 AM Sep 04, 2024 IST | Web Editor
Advertisement

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் தருவதாக மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனம் குறித்து, சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த பெரிய திருமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (54). இவர் தென்னிலையில் உள்ள பிரபு என்பவருக்கு சொந்தமான தனியார் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை சேமிப்பதில் ஆர்வம் கொண்டவர் முருகேசன். இதனிடையே முகநூல் பக்கம் ஒன்றில், ‘ராஜு ஓல்ட் காயின் கம்பெனி, கொல்கத்தா’ என்ற முகவரி கொண்ட விளம்பரத்தை பார்த்து, அதில் இருக்கும் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம், தனது சேமிப்பில் வைத்துள்ள பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் புகைப்படங்களை அனுப்பி வைத்துள்ளார்.

அதைப் பார்த்த அந்த நிறுவனம், முருகேசன் சேமிப்பில் உள்ள பழைய நாணயங்களுக்கு 36
லட்சம் ரூபாய் வரை பணம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், பணத்தை
பெறுவதற்கு முன்பாக ஆவணம் தயார் செய்வதற்கு பணம் கட்ட வேண்டும் என்று
கேட்டுள்ளனர். அதற்காக 1,800 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட அந்த நிறுவனம் 36 லட்சம் ரூபாய் பணத்தை மெஷின்கள் மூலம் எண்ணி, பேக்கிங் செய்யும் வீடியோக்களை முருகேசன் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், நாமக்கல் மாவட்ட எல்லை வரை மட்டுமே தங்களுக்கு அனுமதி உள்ளது எனவும், 36 லட்சம் ரூபாய் பணத்தை பெறுவதற்கு முன்பாக, சேவை வரி கட்டச் சொல்லி நிர்பந்தம் செய்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த முருகேசன் அந்த நிறுவனம் போன் செய்தபோது அழைப்பை ஏற்காமல் இருந்துள்ளார். தொடர்ந்து முயற்சி செய்த அந்த நிறுவனம், பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பெறுவதற்காக ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளபோது, சேவை வரி கட்டவில்லை என்றால், முருகேசன் மீது இதற்காக வழக்கு தொடர முடியும் என்று எச்சரித்துள்ளனர்.

இதனால் அச்சமடைந்த முருகேசன், அந்த நிறுவனத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு,
வறுமையில் இருக்கும் நான் கடன் வாங்கிதான் பணம் அனுப்ப முடியும் என்றும், தன்னை ஏமாற்றி விட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நிறுவனம் முருகேசனுக்கு மேலும் நம்பிக்கை கொடுத்து, ஆசை வார்த்தைக் கூறி, பணம் கட்ட சொல்லி தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.

அதை நம்பிய முருகேசன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் தனக்குத் தெரிந்த
நண்பர்களிடம் கடனாக பெற்று 20, 800 ரூபாய் பணத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். பணம் அனுப்பிய சிறிது நேரத்தில், நிறுவனத்தின் செல்போன் உட்பட ஆன்லைன் வழியாகவும், தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த முருகேசன், மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்ள போவதாக பெட்ரோல் நிலைய உரிமையாளருக்கு வாட்ஸ்அப் வழியாக ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த ஆடியோவைக் கேட்ட பெட்ரோல் நிலைய உரிமையாளர், முருகேசனை மீட்டு, கொல்கத்தா
ஓல்ட் காயின் என்ற போலி நிறுவனம் குறித்து, சைபர் கிரைம் காவல்துறையிடம் ஆன்லைன் வழியாகவும், நேரடியாகவும் புகார் கொடுத்துள்ளனர். ஆன்லைன் வழியாக பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்ட போலி நிறுவனம் குறித்து, சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Crimecyber crime policeOld CoinOld Currencyscam
Advertisement
Next Article