‘துருவ நட்சத்திரம்’ பட வெளியீடு தொடர்பான வழக்கு - நவ. 27-ம் தேதி ஒத்திவைப்பு!
விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனதையடுத்து, இப்படம் தொடர்பான வழக்கை வரும் திங்கள்கிழமை அன்று ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் இன்று (நவம்பர் 24) வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை.
காரணம், சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ரூ.2.40 கோடியை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் கௌதம் வாசுதேவ் மேனன் பெற்றதாகவும் ஆனால், அப்படத்தை அவர் முடிக்கவில்லை என்று பங்குதாரர் வழக்கு தொடர்ந்தார். இதனால், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என்று துருவ நட்சத்திரம் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை வரும் திங்கள் அல்லது புதன்கிழமைகளில் திரும்ப செலுத்தப்படும் எனவும், அதன்பின்னரே ’துருவ நட்சத்திரம்’ படம் வெளியிடப்படும் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும்திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.