Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து சிறுமி உயிரிழந்த வழக்கு - சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
05:56 PM Feb 13, 2025 IST | Web Editor
Advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற எல்கேஜி மாணவி கழிப்பிட தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். ஜனவரி 3ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை பழனிவேல் அளித்த புகாரின் அடிப்படையில், பள்ளி தாளாளர், முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி - க்கு மாற்ற கோரி பலியான சிறுமியின் தந்தை பழனிவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து பெற்றோருக்கு முறையாக பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருந்து 20 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்தும், குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. குழந்தை கழிவு நீர் தொட்டியில் விழுந்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் இல்லை. குழந்தையின் ஆடை நனையவில்லை. மாறாக, உடையில் ரத்தக்கறை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி நிர்வாகம், கண்காணிப்பு கேமரா காட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் மேற்கொள்ளவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

குழந்தையின் உடையில் ரத்தக்கறை குறித்து போலீசாரிடம் தெரிவித்த போது, உடையை திருப்பி தரும்படியும், இல்லாவிட்டால் வழக்கை முடித்து வைத்து விடுவதாக விக்கிரவாண்டி போலீசார் மிரட்டியதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளதால், விசாரணையை மாற்ற வேண்டும். கண்காணிப்பு கேமரா பதிவுகளை பெறும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சம்பவம் தொடர்பாக டி.எஸ்.பி. தலைமையில் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து, 12 வாரங்களில் இறுதி அறிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், சிசிடிவி காட்சிகளை மாணவியின் தந்தையிடம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற மறுப்பு தெரிவித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags :
Madras High Courtprivate schoolUKG StudentViluppuram
Advertisement
Next Article