புளியந்தோப்பில் சரித்திர பதிவேடு ரவுடி வெட்டப்பட்ட வழக்கு - ஆறு பேர் கைது!
சென்னை புளியந்தோப்பு வஉசி நகர் ஆறாவது தெருவை சேர்ந்தவர் கருப்பா என்கின்ற ஆபாவாணன் (28). கூலி வேலை செய்து வரும் இவர் நேற்று மதியம் 3 மணி அளவில் புளியந்தோப்பு ஆடுதொட்டி பின்புறம் உள்ள மாடு தொட்டியில் தனது நண்பர்களான ஜோதிரஞ்சன் (23), ராகுல் (23) மற்றும் சிலருடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில் ஜோதி ரஞ்சன் என்பவர் ஆபாவாணனை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் இருந்த ஆபாவாணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆபாவானன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பட்டினம்பாக்கம் அருகே புளியந்தோப்பு வஉசி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோதிரஞ்சன் (23), புளியந்தோப்பு பிஎஸ் மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் (23), மணிமாறன் என்கின்ற தொட்டி மணி (24), ரவி (25), மனோஜ் (26), ஜோஷ்வா (23) என ஆறு பேரை மடக்கிப் பிடித்தனர்.
இதில் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது ஜோதிரஞ்சன மற்றும் ராகுல் ஆகிய இருவரும் கீழே விழுந்ததில் அவர்களது வலது கை உடைந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் மீட்ட போலீசார் அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.