EVM-ஐ திறக்கும் மொபைல் போனை பயன்படுத்திய சிவசேனா எம்பி-யின் உறவினர் மீது வழக்கு!
மும்பை வடமேற்கு மக்களவை எம்பி ரவீந்திர வைகரின் மைத்துனர், வாக்கு எண்ணும் மையத்தில் EVM-ஐ திறக்க மொபைல் போனை பயன்படுத்தியதாக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை வடமேற்கு மக்களவை தொகுதியில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ரவீந்திர வைக்கர். இவரது மைத்துனர் மங்கேஷ் பாண்டில்கர். வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 4ஆம் தேதி மும்பை கோரேகான் பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் இவர் மொபைல் போனை பயன்படுத்தியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (இவிஎம்) திறக்க, ஒரு முறை கடவுச்சொல்லை (ஓடிபி) உருவாக்க இவரது மொபைல்போன் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மும்பை வடமேற்கு தொகுதியில் ரவீந்திர வைகர், சிவசேனாவின் அமோல் கஜானன் கிர்த்திகரை வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
விதிகளின் படி, இவிஎம் இயந்திரத்தை திறக்க ஓடிபி-ஐ பெறும் மொபைல் போனை தேர்தல் அதிகாரி பயன்படுத்த வேண்டும். வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்று மாலை 4.30 மணி வரை அதாவது ரவீந்திர வைக்கர் வெற்றி உறுதியாகும் மங்கேஷ் பாண்டில்கர் தன் வசம் மொபைல் போனை வைத்திருந்ததும், அதில் பல அழைப்புகளை அவர் மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது.