மணிப்பூர் வன்முறை குறித்து புத்தகம் எழுதிய ஆசிரியர் மீது வழக்கு பதிவு!
மணிப்பூர் வன்முறையைப் பற்றி "மணிப்பூர் ஃபைல்ஸ்" என்கிற புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் பிரனபானந்தா தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மணிப்பூரில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி இன மக்களை பழங்குடியின மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அந்த மாநிலத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. கொடூரத்தின் உச்சமாக குக்கி இனத்தை சேர்ந்த 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்தது.
இந்நிலையில், மணிப்பூர் வன்முறையைப் பற்றி "மணிப்பூர் ஃபைல்ஸ்" என்கிற புத்தகம் எழுதிய எழுத்தாளர் பிரனபானந்தா தாஸ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்த எழுத்தாளர் மீது இரு சமூகத்தினருக்கிடையே பகைமையை வளர்க்க முயற்சித்த குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 25 அன்று, இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொரொம்பட் காவல் நிலையத்தில், காங்லீபக் கன்பா லுப் (கேகேஎல்) என்ற சிவில் அமைப்பின் இளைஞரணித் தலைவர் லுவாங்சா யு நகம்கீங்க்பா என்பவர் பிரணாபானந்தா மீது புகார் அளித்தார். அப்புகாரில் வன்முறையின் ஒரு பக்கத்தை மட்டும் பிரனபானந்தா தாஸ் விவரிப்பதாகவும், இதன் மூலம் வன்முறையை ஒருபக்கசார்புடன் சித்தரித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எழுத்தாளர் பிரணாபானந்தா தாஸ் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்), 200 (தவறான தகவல்களைப் பயன்படுத்துதல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 295 (எந்த வகுப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் ஒரு வழிபாட்டுத் தலத்தை சேதப்படுத்துதல் அல்லது இழிவுபடுத்துதல்).
IPC பிரிவுகள் 505 (பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அறிக்கைகள்), 499 (அவதூறு) மற்றும் 120B (பொது நோக்கத்துடன் குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.