முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து!
முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை அதிமுக உறுப்பினருமான சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியிருந்தார். இதுதொடர்பாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
இதேபோல முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் சி.வி. சண்முகம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
திண்டிவனம் மற்றும் விழுப்புரம் நகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணை நடைபெற்ற வந்தது. இந்நிலையில் இன்று திண்டிவனத்தில் போடப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.