ரூ.15,000 கோடி முதலீட்டில் கார் தொழிற்சாலை... #MaharashtraGovt அனுமதி!
மகாராஷ்டிராவில் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாக்கனில் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் ரூ.15,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது மகாராஷ்டிரா அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.120,000 கோடி முதலீட்டின் ஒரு பகுதியாகும். அதேபோல், மகாராஷ்டிராவில் வரவிருக்கும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் ஆலைக்கும் அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஸ்கோடா, ஆட்டோ வோக்ஸ்வாகன் நிறுவனங்களின் புதிய முதலீட்டைப் பயன்படுத்தி மின்சார வாகனங்கள் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளை உருவாக்கவும், அதன் உற்பத்தி வசதியை மேம்படுத்தவும், மாநிலத்தில் கூடுதலாக 1,000 வேலைகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், சக்கனில் இவி மற்றும் ஹைபிரிட் கார் ஆலையை திறக்க திட்டமிடுவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக ஸ்கோடா, ஆட்டோ வோக்ஸ்வேகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "ரூ.15,000 கோடி வரையிலான புதிய முதலீட்டுக்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறோம். இந்திய வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்காக குழுமத்தின் தயாரிப்புகளை மேலும் மேம்படுத்துவதை இந்த முதலீட்டு நோக்கமாகக் கொண்டுள்ளது. உற்பத்தி வசதிகளை மேம்படுத்துதல், கூடுதல் வேலைகளை உருவாக்குதல் வளர்ப்பது ஆகியவை இதில் அடங்கும். ஒப்பந்தம் குறித்த கூடுதல் விவரங்களைப் பிற்காலத்தில் வழங்குவோம்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.