விழுப்புரம் அருகே லாரி மீது கார் மோதி விபத்து - ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு!
விழுப்புரத்தில் இருந்து புதியதாக பணியில் சேர்ந்த நான்கு பட்டதாரி ஆசிரியர்கள் குடும்பத்தினரோடு சென்னைக்கு வந்துள்ளனர். அப்போது விழுப்புரம் அருகேயுள்ள அய்யூர் அகரம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் நோக்கி சென்ற லாரி மீது கார் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த திருச்சி பாலக்கரை பகுதியை சார்ந்த சாகுல் ஹமீது( 52), விழுப்புரம் மூவேந்தர் நகர் பகுதியை சார்ந்த ஆரம்பபள்ளி ஆசிரியர் சிவரஞ்சனி (38) ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் விபத்தில் காரில் பயணித்த ஆசிரியர்கள் மகரினிஷா, கெளசல்யா, மலர்விழி, மற்றும் பிரகாஷ், ஓட்டுனர் சூர்யா ஆகியோர் காயங்கங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த ஆசிரியர் சிவரஞ்சனி விழுப்புரம் மாவட்டம் காரணைபெருச்சானூர் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார். சென்னையில் நடைப்பெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க ஆசிரியர்களோடு சென்னை சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.