”அண்ணே... என்னை மன்னிச்சிடுங்க...” கண்ணீர் விட்டு அழுத நடிகர் விஷால்...
தேமுதிக நிறுவனரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு நடிகரும், நடிகர் சங்க பொதுச் செயலாளருமான விஷால் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உள்ளதாகவும், சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமையகம் இன்று காலை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
விஜயகாந்தின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், தமிழ் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றன. முக்கியமாக, பல துணை நடிகர்கள் நேரில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் காணொலி ஒன்று வெளியிட்டுள்ளார்.
அண்ணே.. என்னை மன்னித்துவிடுங்கள். இந்த நேரத்தில் நான் உங்கள் பக்கத்தில் இருந்து உங்கள் முகத்தை ஒருமுறை பார்த்து உங்கள் காலை தொட்டுக் கும்பிட்டிருக்க வேண்டும். உங்கள் அலுவலகத்துக்கு யாராவது வந்தால் அவர்களுக்கு சோறு போட்டு அனுப்புவீர்கள்.
ஒரு அரசியல்வாதி, நடிகர் சங்க முன்னாள் நிர்வாகியோ என்பதை விட ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டார் என்பதை தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு மனிதராக பேர் வாங்குவது சுலபம் அல்ல. சிலருக்கு மட்டுமே அந்த பேர் நீடிக்கும். என்னை மன்னித்து விடுங்கள் அண்ணே. சத்தியமாக சொல்கிறேன். நான் உங்களுடன் பக்கத்தில் இருந்திருக்க வேண்டும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய வேண்டும்” இவ்வாறு அந்த காணொலியில் விஷால் கண்ணீருடன் பேசியுள்ளார்.