"மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்" - பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை நடந்த மத்திய மந்திரி சபை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில், மத்திய பட்ஜெட் 2025-ஐ தாக்கல் செய்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் பேசிய பிரதமர் மோடி, பொதுமக்களை மனதில் கொண்டு பட்ஜெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பட்ஜெட்டானது ஏழைகள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கம் கொண்டது என்றார். இதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவையில் 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
அவர் பேசும்போது, "அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, 2028 வரை இந்த திட்டம் செயல்படும். நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும். கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்டு ஒப்பிடும்போது மத்திய அரசின் கடன் சுமை குறைந்துகொண்டே போகிறது. இந்தியாவில் பொம்மைகளைத் தயாரிக்க சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் கொண்டு வரப்படும்"
இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.