சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை குறைத்தது கனடா அரசு - இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு இருக்குமா..?
சர்வதேச மாணவர்களுக்கான விசாக்களை குறைத்து கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர். கடந்த 2021ம் ஆண்டின் புள்ளி விபரங்களின் படி கிட்டத்தட்ட 10லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் படித்து வருகின்றனர். இதேபோல கனடாவிலும் இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர்.
கனடாவுக்குச் செல்லும் பிற நாட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி, கனடா அரசுக்கு அந்நாட்டு மாகாணங்கள் அழுத்தம் அளித்த நிலையில் இந்த முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து கனடாவின் குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் செய்தியாளர்களிடம் பேசியபோது “ அதிக அளவில் பிற நாட்டவர்கள் கனடா செல்வதால், அங்கு அவர்கள் தங்குவதற்கு போதிய வீடுகள் இல்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த நடவடிக்கையை கனடா எடுத்துள்ளது. அடுத்த ஆண்டு கனடாவில் படிப்பதற்கு வழங்கப்பட உள்ள புதிய அனுமதி ஆவணங்களின் எண்ணிக்கை, நிகழாண்டு இறுதியில் மறுமதிப்பீடு செய்யப்படும் ” என்று அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார்.
கடந்த வருடன் கனடாவிற்கு படிக்க சென்ற இந்திய மாணவர்கள் தாங்கள் இங்கே படிக்க விரும்பி சில நிறுவனங்களிடம் மோசமடைந்து விட்டோம் எனவும், தங்களுக்கு சரியான கல்வி நிலையங்களோ, போதிய இருப்பிட வசதியோ செய்து கொடுக்கப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.