#Canada | “பிரதமராக தொடர்வேன்.. அடுத்த தேர்தலிலும் கட்சியை வழிநடத்துவேன்..” - ஜஸ்டின் ட்ரூடோ பேட்டி!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதற்கு சொந்த கட்சி எம்பிக்கள் கெடு விதித்துள்ள நிலையில், லிபரல் கட்சியை அடுத்த தேர்தலிலும் வழிநடத்தவுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளது எம்பிக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த இடைத்தேர்தலில் லிபரல் கட்சி செல்வாக்கு மிகுந்த டோரண்டோ செயிண்ட் பாலில் தோல்வியை சந்தித்தது. இதனிடையே, இந்தியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் குற்றச்சாட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவுக்கான தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரங்கள் குறித்து லிபரல் கட்சியின் சில எம்பிக்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்த நிலையில், “கனடா மக்கள் ஜஸ்டின் பதவி விலக் விரும்புகிறார்கள்” என்று அக்கட்சியின் எபி சீன் கேஸே கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, நேற்று முன்தினம் (அக் .23) ஜஸ்டின் தலைமையில் லிபரல் கட்சி எம்பிக்களின் ரகசிய கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில், 25 முதல் 30 எம்பிக்கள் வரை ஜஸ்டினிடம் தங்களின் குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். மேலும், வரும் அக்டோபர் 28-ம் தேதியுடன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கெடு விதித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று (அக். 24) செய்தியாளர்களை சந்தித்த ஜஸ்டின், தான் பிரதமராக தொடர்வேன் என்றும் அடுத்த தேர்தலிலும் லிபரல் கட்சியை வழிநடத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு எதிராக எம்பிக்கள் போர்க் கொடி தூக்கினால், அவர்களை பேரவையிலிருந்து நீக்குவாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வலுவான உரையாடல்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.