“கால்டுவெல் முனைவர் பட்டம் பெற்றவர்!” - தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு!
‘ராபர்ட் கால்டுவெல் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்’ என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு தெரிவித்துள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு' என்ற புத்தகத்தை ஆளுநர் ரவி வெளியிட்டார். பின்னர் பேசிய அவர் ஜியு போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர் எனக் கூறினார்.
இவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளானது. பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கால்டுவெல் பட்டப்படிப்பு பெற்றவர் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சரிபார்ப்பு குழு வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
தமிழறிஞர் 'ராபர்ட் கால்டுவெல் பள்ளிப்படிப்பைக் கூட தாண்டவில்லை' என்பது பொய்!
வதந்தி:
"ராபர்ட் கால்டுவெல் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்கவில்லை. அவரது படிப்புத் தொடர்பான தவறான தகவல்களைக் கூறுகின்றனர்" என தகவல்கள் பரப்பப்படுகின்றன.
உண்மை என்ன?
இச்செய்தி முற்றிலும் தவறானதாகும். திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடி பகுதியில் உள்ள பேராசிரியர் கால்டுவெல் ஆய்வு மையத்தின் பிரதிநிதிகள் தமிழறிஞர் கால்டுவெல்லின் கல்வித்தகுதி தொடர்பான சான்றிதழை பகிர்ந்துள்ளனர். அதில், 'ராபர்ட் கால்டுவெல் பி.ஏ' என்றும் திராவிட மொழிகளுக்கு அவர் ஆற்றிய சேவைகளைக் கருத்தில் கொண்டு டிப்ளமோ வழங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு சான்றிதழில் கால்டுவெல் எம்.ஏ பட்டம் வாங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.