சிஏ தேர்வு விவகாரம் : “மத்திய அரசின் செயல் வருத்தமளிக்கிறது” - கனிமொழி எம்பி!
தை பொங்கல் அன்று நடத்த இருந்த சிஏ தேர்வை ஜனவரி 16 அன்று மாற்றிய போதும் தமிழ்நாட்டின் கலாச்சார விழுமியங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிப்பதாக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சி.ஏ எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வு இந்தியா முழுவதும் அடுத்த ஆண்டு ஜனவரி 12, 14, 16, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்தது. ஜன. 14ஆம் தேதி தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் தினம் வருகிறது. இதனையடுத்து பொங்கல் அன்று தேர்வு நடத்தப்படுவதா என பல்வேறு தரப்பிலிருந்தும் பல கேள்விகள் எழுந்தன.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளும்ன்ற் உறுப்பினர் சு.வெங்கடேஷனும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த பிரச்சனை தொடர்பாக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குரல் எழுப்பியது. இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்வு ஆணையத்தின் முடிவுகளில் மத்திய அரசு தலையிடுவதில்லை என தெரிவித்தார்.
பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்தநிலையில், தற்போது தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி சி.ஏ தேர்வு 2025 ஆம் ஆண்டு ஜனவரி 12, 16, 18,20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக எம்பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
“தமிழ்நாடு அரசும், திமுகவும் பிரச்னைகளின் போது எப்போதும் மக்களுக்கு துணை நிற்கிறது. நமது இதயங்களுக்கு நெருக்கமான பொங்கல் பண்டிகையன்று CA தேர்வு திட்டமிடப்பட்டதற்கு, மீண்டும் மீண்டும் கவலை தெரிவித்தோம். திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்தேன். தற்போது இந்த தேர்வு ஜன.14-ஆம் தேதியிலிருந்து 16க்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், நமது கலாச்சார விழுமியங்களை மத்திய அரசு திரும்ப திரும்ப கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமளிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.