”நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்”- பிரதமர் மோடி புகழாரம் ..!
நாடாளுமன்றக் குளிகால கூட்டத் தொடரானது இன்று தொடங்கியது. வருகிற 19 ஆம் தேதி வரை இது நடைபெறுகிறது. மாநிலங்களவையில் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், குடியரசு துணைத்தலைவராக பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடர் இதுவாகும்.
இதனை தொடர்ந்து மாநிலங்களவையில், பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனை வரவேற்று பேசினார். அவர் பேசியது, ”சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து இவ்வளவு பெரிய உயரத்தை குடியரசு துணைத் தலைவர் எட்டி இருக்கிறார். உங்களை பல ஆண்டுகளாக எனக்கு தெரியும் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் ஒவ்வொரு கட்டமாக அரசியலில் கடந்து வந்த பாதையையும் நான் பார்த்திருக்கிறேன். ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நீங்கள் மேற்கொண்டு இருக்கிறீர்கள்.
நாட்டிற்கு சேவை செய்ய தனது வாழ்நாளையே தியாகம் செய்தவர் சி பி ராதாகிருஷ்ணன். இந்த அவையில் அமர்ந்திருக்கும் அனைத்து உறுப்பினர்களும், உங்கள் கண்ணியத்தையும் எப்போதும் பேணுவார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். சமூக சேவையில் ஆர்வமுள்ள நம் அனைவருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒரு உத்வேகமாகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார்” என்றார்.
கடந்த ஜூலை 21 அன்று குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவு காராணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து செப்டம்பரில், குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளரான முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி. சுதர்ஷன் ரெட்டியை வென்ற என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15 வது துணைக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.