தெலங்கானாவில் கார் ஆலை அமைக்க BYD முதலீடு செய்ததாக வெளியான தகவல் - நிறுவனம் மறுப்பு!
சீன கார் நிறுவனமான பி.ஒய்.டி தங்களது கார் உற்பத்தி ஆலை அமைப்பதற்காக தெலங்கானாவில் முதலீடு செய்ய விருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தது. இந்த செய்திகள் குறித்து அண்மையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பி.ஒய்.டி நிறுவன முதலீடு தெலங்கானாவுக்கு சென்றது கவலையளிக்கிறது என்றும் தமிழ்நாடு முதலீட்டை ஈர்க்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “சீனாவைச் சேர்ந்த மின்சார கார் நிறுவனமான பி.ஒய்.டி (BYD - Build Your Dreams) ரூ. 85 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் அதன் முதலாவது கார் உற்பத்தி ஆலையை தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டிற்கு இந்த கார் உற்பத்தி ஆலையைக் கொண்டு வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தும் கூட, அந்த வாய்ப்புகளை தமிழ்நாடு அரசு கோட்டை விட்டிருக்கிறது.
முதலீடுகளை ஈர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தெல்லாம் தமிழ்நாடு அரசு ஆராய வேண்டும். அதனடிப்படையில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான தமிழ்நாட்டின் திறனை அரசு அதிகரிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தெலங்கனாவில் கார் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக முதலீடு செய்யப்பட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.