“ஒரே தடவ மணிப்பூருக்கு வாங்க...." கண்ணீர் மல்க பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்த குத்துச்சண்டை வீரர்!
மணிப்பூரைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் சுங்ரெங் கோரன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே எழுந்த மோதல் பெரும் கலவரமாக மாறியது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த கலவரம் இன்று நீடிக்கிறது. இந்த இனக்கலவரத்தில் இதுவரை 200க்கும் மேற்பட்ட பழங்குடியினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 50, 000க்கும் மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
குகி பழங்குடியினத்தை சார்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வீடியோ வெளியானது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன் பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில், “மணிப்பூரில் வன்முறை நீடிக்கிறது. கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. அங்கு மக்கள் செத்து மடிகின்றனர். பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளன. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ஒரே ஒரு முறை மணிப்பூருக்கு வாங்க, மணிப்பூரின் அமைதியை மீட்டெடுங்கள்” என அழுகுரலோடு பேசியுள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்த இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவர் ஸ்ரீனிவாஸ் பிவி, “மணிப்பூரின் சுங்ரெங் கோரென்.. மணிப்பூர் பிரதமரின் குடும்பத்தில் ஒரு அங்கமாக இருந்திருந்தால், மணிப்பூரின் ஒவ்வொரு குடிமகனும் இன்று அழவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது” என குறிப்பிட்டுள்ளார்.