செங்கல்பட்டில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்..!
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், செங்கல்பட்டில் போலீசாரின் பாதுகாப்புடன் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதிய பண பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அடுத்தடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்த நிலையில், ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதையடுத்து நேற்று(ஜன.8) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இந்நிலையில், செங்கல்பட்டு பணிமணையில் இருந்து பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதால் காவலர்களின் உதவியுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டு பணிமனையில் இருந்து 40 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், 11 பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதையும் படியுங்கள் : வேலைநிறுத்தம் எதிரொலி – ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
அதேபோல் மதுராந்தகம் பேருந்து பணிமனையில் இருந்து காவல்துறை உதவியுடன் இன்று காலை ஐந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பணிமனையில் 54 பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு நிலையில், பணியாளர்களின் வேலைநிறுத்தத்தால் வழக்கம்போல இங்கு பேருந்துகள் இயக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.