பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருமயம் அருகே கோலாகலமாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்தில் பங்குனி
உத்திரத்திரத்தை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை,
சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 24 ஜோடி மாட்டு வண்டிகள்
பங்கேற்றன. இந்த போட்டி பெரிய மாடு, சிறிய மாடு பந்தயம் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 16 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. முதலாவதாக நடத்தப்பட்ட பெரிய மாடு பிரிவில், முதல் பரிசை திருமயம் வளையல்வயல் அறிவு என்பவருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. இதனைத் தொடர்ந்து, கோனாபட்டு கொப்புடையம்மன், தஞ்சை திருப்பந்துருத்தி அமர்சிங், பரளி யஸ்வந்த் சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் 2,3 மற்றும் 4 ஆம் பரிசுகளை வென்றன.
இதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கேகே பட்டி பொன்னையா கண்ணன் என்பவரின் மாடுகள் வென்றன. மேலும், மணப்பட்டி புலிப்பாண்டி, கொள்ளக்காட்டுப்பட்டி முருகேசன், பரளி கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் 2,3 மற்றும் 4 பரிசுகளை வென்றன. இந்த பந்தயத்திற்கான ஏற்பாடுகளை பரளி இளைஞர் சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.