Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்… அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது!

பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது.
12:07 PM Jan 30, 2025 IST | Web Editor
Advertisement

மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் 3வது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தொடர்பாக தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினருடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு மாதம் ஆலோசனை நடத்தி அவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Advertisement

இதனையடுத்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (பிப். 1) 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

 

பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக, நாளை (ஜன. 31) முதல் பிப். 13 வரையும், 2ம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாஜக, காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் முக்கிய எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், கிரண் ரிஜுஜு, காங்கிரஸ் எம்.பி.க்கள் கௌரவ் கோகோய், சுரேஷ், திமுக எம்.பி. டி.ஆர். பாலு, திரிணமூல் காங்கிரஸின் சுதிப் பந்தோபாத்யாய், டெரெக் ஓ பிரையன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர். மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மேலும், இந்த கூட்டத்தொடரில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதா உள்ளிட்ட 62 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Advertisement
Next Article