சற்று நேரத்தில் பட்ஜெட் தாக்கல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்... குடியரசுத் தலைவர் வாழ்த்து!
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்ற பெருமையை பெற்ற இவர், இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இதையும் படியுங்கள் : பட்ஜெட் தாக்கலில் மொராஜி தேசாயின் சாதனையை சமன் செய்யும் நிர்மலா சீதாராமன்...!
இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணை அமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் கரட், பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தனர். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், அவரது குழுவுக்கும் குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து தெரிவித்தார்.