Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் புரூஸ் லீ… பிறந்தநாள் பகிர்வு!

10:43 AM Nov 27, 2024 IST | Web Editor
Advertisement

குங்ஃபூ மன்னன், சண்டைக் கலையின் வித்தகன், இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன் புரூஸ் லீ-யின் பிறந்தநாள் இன்று...

Advertisement

“10,000 உதைகளை 1 முறை பயிற்சி செய்த மனிதனுக்கு நான் ஒருபோதும் பயப்படுவதில்லை, ஆனால் 1 கிக்கை 10ஆயிரம் முறை பயிற்சி செய்த மனிதனுக்குத்தான் நான் பயப்படுகிறேன்.” இதைச் சொன்னவர் இன்றைய தலைமுறையினரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வரும் புரூஸ்லீ தான். தற்காப்பு கலை என யாரேனும் சொன்னால் சட்டென முதலில் ஞாபகத்திற்கு வருவது கூரான பார்வையும் ஒல்லியான தேகமும் கொண்ட புரூஸ்லியின் முகம் தான். தற்காப்பு கலையை உலகிற்கு திரையின் மூலம் அதிகம் அறிமுகப்படுத்தியவர் புரூஸ் லீ. குறுகிய காலமே வாழ்ந்த இந்தக் கலைஞனின் பிறந்தநாள் இன்று.

புரூஸ் லீ -யின் பிறப்பும், இளமையும் :

1940 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஹாங்காங்கை பூர்வீகமாக கொண்ட பாடகருக்கும், ஜெர்மன் வம்சாவளி தாய்க்கும், அமெரிக்காவில் பிறந்தவர்தான் புரூஸ் லீ. மூன்று மாத குழந்தையாக இருந்த போது, ​​​​அவரது குடும்பம் ஹாங்காங்கிற்கு மாறியது. லீக்கு மேலும் நான்கு உடன்பிறப்புகள் இருந்தனர். சிறு வயதிலேயே சீன தற்காப்பு கலைகளை கற்று கொண்டார். அவரது முதல் ஆசிரியர் அவரது தந்தை, லீக்கு அடிப்படைகளை கற்பித்தார்.

புரூஸ் லீ -யின் கல்வி :

13 வயதில், யிப் மேனின் கீழ் விங் சுன் பயிற்சி பெறத் தொடங்கினார். புரூஸ் லீ தனது ஆரம்பக் கல்வியை 'லா சாலே' கல்லூரியில் பயின்றார். ஆனால், நல்ல மதிப்பெண்கள் கிடைக்காததால், அங்கிருந்து அகற்றப்பட்டு, 'செயின்ட் பிரான்சிஸ் சேவியர்' கல்லூரியில் சேர்த்தனர். லீயின் வன்முறை நடத்தையால் லீயின் பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர்.

இதனால், ஹாங்காங்கை விட்டு வெளியேறி சான் பிரான்சிஸ்கோவிற்கு சென்றனர். லீ தனது மேற்படிப்பிற்காக எடிசன் தொழில்நுட்பப் பள்ளியில் சேர்ந்தார். இதற்கிடையில், அவர் ரூபி சோவின் உணவகத்தில் வெயிட்டராக பணியாற்றினார். 1961ம் ஆண்டு, அவர் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் நாடகத்தில் தேர்ச்சி பெற்றார்.

புரூஸ் லீ -யின் கலை சிறப்புகள் :

தீவிரமான பயிற்களின் மூலமாக தசையை வலிமையாக்குவது, உடலை மிக எளிதாக வளைப்பது, நெருக்கடியான தருணத்திலும் இதயத் துடிப்பைச் சீராக வைத்திருப்பது என பல வகையான திறன்களையும் பெற்றவர் புருஸ் லீ. 1964-ஆம் ஆண்டு Long Beach International Karate Championship போட்டியின் போது புரூஸ் லீ நிகழ்த்திய சாகசங்கள் பலரையும் மெய்சிலிர்க்க வைத்தன. ஆள்காட்டி விரலை மட்டும் தரையில் ஊன்றியபடி, புஷ் அப்ஸ் பயிற்சியை அவர் மேற்கொண்டபோது பார்வையாளர்கள் அனைவரும் அதனை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். One Inch Punch போன்ற மாறுபட்ட நுணுக்கங்களை லீ அறிமுகப்படுத்தியதும் இந்த நிகழ்வின்போதுதான். 1967-ஆம் ஆண்டில் இதே போட்டியின்போது உலக கராத்தே சாம்பியான vic moore-ஐ மிக எளிதாக வீழ்த்தினார்.

புரூஸ் லீ-யின் சினிமா பயணம் :

புரூஸ் லீ-யின் தந்தை நாடக நடிகர் என்பதால் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு திரை வாய்ப்பு கிடைத்து. கோல்டன் கேட் கேர்ல் என்ற திரைப்படத்தில் குழந்தையாகவே புரூஸ் லீ காட்டப்பட்டிருப்பார். குழந்தை நட்சத்திரமாகவும் சிறுவனாகவும் ஏராளமான படங்களில் தோன்றியிருக்கிறார்.

திரையுலகில் குறுகிய காலத்தில் பல உச்சங்களை பெற்றாலும் இறப்பதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்புதான் அவர் நாயகனாகத் தோன்றிய முதல் திரைப்படமே வெளியானது.‘தி பிக் பாஸ்’ என்ற அந்தத் திரைப்படம், வசூல் ரீதியாக உச்சத்தை அடைந்ததால், உலகம் முழுவதும் அறியப்படும் நபரானார் புரூஸ் லீ. ‘கேம் ஆஃப் டெத்’ என்ற திரைப்படத்துக்கான பணிகள் தொடங்கியபோது, வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் என்டர் தி டிராகன் திரைப்படத்துக்கான அழைப்பு வந்தது. பிரமாண்டமான படைப்பாக இருக்கும் என்பதால்,‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பை நிறுத்திவிட்டு, வார்னர் பிரதர்ஸின் அழைப்பை லீ ஏற்றுக் கொண்டார். 1973-ஆம் ஆண்டு ஜூலை 26 -ஆம் தேதி திரைப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டது. அதற்கு 6 நாள் முன்னதாக லீ மரணமடைந்தார்.

புரூஸ் லீ-யின் மரணம்:

32 வயதில் புகழின் உச்சியில் இருந்த ஒரு கலைஞன் இறந்து போனதை அவரது ரசிகர்களால் மட்டுமல்ல, உலகத்தின் பலராலும் நம்ப முடியவில்லை. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் மூளை வீக்கத்தால் லீ இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. எனினும் இன்று வரை அவரது மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அவர் மறைந்துவிட்டார், அவர் பதித்த தடம் இன்னும் மறையவில்லை.

புரூஸ் லீயை பற்றி சில தகவல்கள் :

  1. கவிதை எழுதுவது புரூஸ் லீயின் ஒரு ரகசிய பொழுதுபோக்காக இருந்தது.
  2. புரூஸ் லீ ஹாங்காங்கின் மிக முக்கியமான குழந்தை நடிகர்களில் ஒருவர். அவருக்கு 18 வயதாகும் போது 20 படங்களில் நடித்திருந்தார்.
  3. ஜாக்கி சான், புரூஸ் லீயின் ‘ஃபிஸ்ட் ஆஃப் ப்யூரி’ மற்றும் ‘என்டர் தி டிராகன்’ படங்களில் ஸ்டண்ட்மேனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
  4. புரூஸ் லீ ஒரு சிறந்த சா-சா நடனக் கலைஞராகவும் அறியப்பட்டார். அவர் 1958 இல் ஹாங்காங் சா-சா சாம்பியன்ஷிப்பையும் வென்றார்.

புரூஸ் லீ -யின் சிந்தனைகள் :

  1. நாம் இருளில் நடக்கிறோம் என்ற விழிப்புணர்வே இல்லாதவர்கள் ஒருபோதும் ஒளியைத் தேடிச்செல்ல மாட்டார்கள்.
  2. மக்கள் ஒரேமாதிரியாக இருக்க முயற்சிசெய்கிறார்கள். இதுவே அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.
  3. கற்றுக்கொள்வது மட்டுமே போதாது அதை உபயோகிக்க வேண்டும்
  4. வெற்றி பெற்ற மனிதர்களைப் பின்பற்றுவதாக எண்ணி, அவர்களாகவே மாறிவிடாதீர்கள். உங்களுக்கென தனித்துவம் இருக்கிறது.
  5. அறிவு உங்களுக்கு அதிகாரத்தை வழங்கலாம். குணம்தான் மரியாதையைப் பெற்றுத்தரும்.
  6. ஒரு செயலைச் செய்வதற்கான ஆர்வம் மட்டும் இருந்தால் போதாது. அதைச் செய்து முடிப்பதற்கான அக்கறையும் வேண்டும்
  7. இலக்குகள் என்றால் அது வானளவு இருக்க வேண்டும் எனக் கட்டாயமில்லை. சிறிய இலக்குகளின் மூலமும் உங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்
  8. வடிவம் இல்லாது இரு. எதில் போட்டாலும் அந்த வடிவத்திற்கேற்ப மாறும் நீரைப்போல் இரு
Tags :
புரூஸ்லீbruceleeBruceLeeLivesOnHappyBirthdayBruceLeekungfulegendaryquotesLittleDragonMotivationalQuotesNews7Tamilnews7TamilUpdatesQuoteOfTheDayRememberingBruceLeewingchun
Advertisement
Next Article