"தம்பி ஞானசேகரன்"... சர்ச்சையை கிளப்பிய வீடியோ - சபாநாயகர் #Appavu விளக்கம்!
திருநெல்வேலி மாவட்டம், சீவலப்பேரி சாலையில் அமைந்திருக்கும் நீச்சல் குளம் வளாகத்தில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இதனை சபாநாகர் அப்பாவு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு பேசியதாவது,
"மாநில சட்டப்பேரவை தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பீகாரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று சபாநாயகர் ஆளுநர் எப்படி நடக்க கூடாது என்பதை வலியுறுத்தி பேசினேன். தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்த தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுப்பது கிடையாது. தீர்மானத்திற்கு ஒப்புதல் தர அவர் எந்த முயற்சியும் எடுப்பதில்லை, யோசிப்பதும் இல்லை.
அதனை திருப்பி அனுப்பி விட்டு மீண்டும் அந்த தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்தும், நிறைவேற்றாமல் இருந்து வருவது தொடர்பாகவும் பல்வேறு பிரச்னை குறித்தும் பேசினேன். நான் பேசுவதை பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். ஆளுநரை நீக்குவதற்கு சட்டமன்றங்களுக்கு அதிகாரம் வேண்டும். ஜனநாயக வழியில் அறவழியில் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன்.
நான் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஞானசேகரன் என்ற பெயரில் ஒருவர் எனக்கு சால்வை அணிவித்தார். அவரது பெயரை சுட்டிக்காட்டிதான் தவறு செய்துள்ள ஞானசேகரன் மீது 3 ஐபிஎஸ் அதிகாரிகளை வைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக பேசினேன். முழு வீடியோவையும் பார்த்தால் நான் பேசியது தெரியும்.
தவறுதலாக கருத்துக்கள் சித்தரிக்கப்படுகிறது.
மத்திய அரசு யுஜிசி வைத்து மாநில அரசுகளை மிரட்டுகிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை வைத்தும் மிரட்டுகிறது. பட்டப்படிப்பில் முதலிடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது. அதற்காக மத்திய அரசு யுஜிசி வைத்து மிரட்டுகிறது. யுஜிசிக்கு எந்த அதிகாரமும் இல்லை, இல்லாத அதிகாரத்தை வைத்து எப்படி உத்தரவிட முடியும்"
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.