#Brazil | எக்ஸ் வலைதளத்திற்கு தற்காலிக தடை விதிப்பு!
இனி எக்ஸ் வலைத்தளம் பிரேசிலில் இயங்காது. அங்கே எங்களின் அனைத்து சேவைகளையும் நிறுத்தப்போகிறோம் என ட்விட்டர் (எக்ஸ்) சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அந்நிறுவனம் பேசுபொருளாக இருந்து வருகிறது. இதில் ட்விட்டரின் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றியதும் அடங்கும். இந்நிலையில், தற்போது எக்ஸ் வலைத்தளம் பிரேசில் நாட்டில் இயங்காது என அந்நிறுவனம் கூறியது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.
"பிரேசில் நாட்டுச் சட்டப்படி, பொய்யான செய்திகளையும், வெறுப்புணர்வையும் பரப்பும் ட்விட்டர் (எக்ஸ்) கணக்குகளைத் தடை செய்யவில்லை" என குற்றம் சாட்டி, கடந்த சில மாதங்களாகவே எலான் மஸ்க்கிற்கும், அந்நாட்டு நீதிபதியான அலெக்சாண்டர் டீ மோரேஸிற்கும் இடையே வார்த்தைப் போர் நடந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக நீதிபதி மோரேஸை 'கிரிமினல்' என எலான் மஸ்க் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையானது.
தொடர்ந்து, கடந்த ஆக. 29-ம் தேதி, பிரேசிலில் இயங்கிவரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமான ஸ்டார்லிங்கின் வங்கிக் கணக்குகளை முடக்க நீதிபதி அலெக்சாண்டர் டீ மோரேஸ் உத்தரவிட்டார். தனக்கான எந்தவொரு சட்டப் பிரதிநிதியையும் எக்ஸ் நிறுவனம் நியமிக்கவில்லை என்பதும், சில ஆவணங்களைச் சமர்ப்பிக்காததற்காக நீதிமன்றம் விதித்த அபராதத்தைக் கட்டவில்லை என்பதும் காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தங்களது வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கான ஆணை வந்துள்ளதாக ஸ்டார்லிங்க் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
சட்டப் பிரதிநிதியை நியமிக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எலான் மஸ்க் மறுத்ததை அடுத்து பிரேசில் நாட்டில் எக்ஸ் வலைதளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும் நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கி நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தும் வரை எக்ஸ் வலைதளத்திற்கான தடை தொடரவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த மாத தொடக்கத்தில் எக்ஸ் வலைத்தளம் 'தங்களது வலைத்தளம் இனி பிரேசிலில் இயங்காது.' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.