#Brazil | வீடு மீது விமானம் மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு!
பிரேசிலில் வீடு மீது விமானம் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீப நாட்களான விமான விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வினானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளே இது போன்ற விபத்துக்களுக்கு வழி வகுக்கின்றன. ஒரு சில நேரங்களில் விபத்தில் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், சில விபத்துக்கள் பெரும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதன் காரணமாக விமானங்களில் ஏற்படும் தொழில்நுட்ப காரணங்களை கண்டறிந்து இனி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் இது போன்ற சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். அப்போது, சாலொ பாலோ மாகாணம் கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் எதிர்பாராத விதமாக அங்கிருந்த வீடு மீது மோதியது.
இதில் விமானம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், மீட்புக்குழுவினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக விமானத்தில் பயணித்த 10 பேரும் உயிரிழந்தனர்.
அதேசமயம், வீட்டில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.