எதிர்க்கட்சிகள் அமளி | நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று காலை தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி, டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியதும், உயிரிழந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது . அப்போது எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து முழக்கம் எழுப்பினர். இதனால், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஏற்கெனவே கொடுத்திருந்த நோட்டீஸைக் குறிப்பிட்ட அனுமதி கோரினர். ஆனால் அவைத் தலைவர் ஓம் பிர்லா அத்தகைய விவாதங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் தொடர் அமளி காரணமாக இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : “பெண்கள் பாதுகாப்பிற்கு தனி இணையதளம் தேவை”- தவெக தலைவர் விஜய்
அதேபோல், மாநிலங்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி விவகாரம் மற்றும் மணிப்பூர் வன்முறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் எனக் கோரி விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அவைத் தலைவர் மாநிலங்களவையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார். அத்துடன் நாளை மறுதினம் (நவ.27ம் தேதி) காலை 11 மணிக்கு அவை மீண்டும் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.