புக்கர் பரிசு வென்ற ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச்!
அயர்லாந்தில் போரில் சிக்கிக் குலைந்த தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பெண்ணின் போராட்டம் பற்றி எழுதப்பட்ட “Prophet Song” என்ற புத்தகத்திற்காக எழுத்தாளர் பால் லிஞ்ச் “புக்கர் பரிசு” வென்றுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற புனைவு இலக்கிய விருதான புக்கர் பரிசை ஐரிஷ் எழுத்தாளர் பால் லிஞ்ச் பெற்றார். பால் லிஞ்ச் எழுதிய ப்ராபெட் ஸாங் (Prophet Song - தீர்க்கதரிசியின் பாடல்) என்ற நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. லண்டனில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் புக்கர் விருதுடன் பரிசுத் தொகையாக 50 ஆயிரம் பவுண்ட்களும் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 52 லட்சம்) பால் லிஞ்சுக்கு வழங்கப்பட்டது.
மொத்தம் 163 நாவல்களிலிருந்து இறுதிச் சுற்றுக்கு 6 நாவல்கள் தேர்வு செய்யப்பட்டன. அயர்லாந்தில் சர்வாதிகாரம் மற்றும் போரில் சிக்கிக் குலைந்த தன் குடும்பத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு பெண்ணின் போராட்டம் பற்றிய ஆன்மாவை உலுக்குகிற நாவல் இது என்று புக்கர் பரிசுக்கான தேர்வுக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த நாவல்களிலிருந்து விருதுக்காக பால் லிஞ்ச்சின் நாவல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவருடைய 5-வது நாவல் இது.
அரசியல் மோதலைப் பற்றிய நாவல்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகப் புக்கர் பரிசைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.