கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு!
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களுக்கு 20% போனஸ், மற்ற ஆலைகளின் ஊழியர்களுக்கு 10% போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சர்க்கரைத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023-2024 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய இரு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 11.67% என மொத்தம் 20% போனஸ் வழங்கவும், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மிகை ஊதியமாக 8.33% மற்றும் கருணை தொகையாக 1.67% என மொத்தம் 10% போனஸ் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமார் 5775 தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பெறுவர். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.411.90 இலட்சங்கள் செலவினம் ஏற்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.