பாதி எரிந்த நிலையில் தனிப்படை காவலர் உடல் கண்டெடுப்பு... ஈச்சனேரியில் பரபரப்பு!
மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சனேரி பகுதியில், நேற்று மதியம் பாதி எரிந்த நிலையில், முகம் சிதைக்கப்பட்டு அடையாளம் தெரியாத வாலிபர் உடல் கண்டெடுக்கப்பட்டது. பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் எரிந்த நிலையில் உயிரிழந்த வாலிபர் விருதுநகரை சேர்ந்த மலையரசன் (36) என்பது தெரிய வந்துள்ளது. இவர் சிவகங்கை காளையார் கோயிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்றும், இவரது மனைவி கடந்த 1ஆம் தேதி விபத்தில் காயம் ஏற்பட்டு, மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.
மலையரசன் சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் மனைவியின் சிகிச்சை கட்டண ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேரி பகுதியில் பாதி எரிந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கொலை செய்து பின்னர் சடலத்தை இங்கு கொண்டு வந்து எரித்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.