நீட் தேர்வு விலக்கு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை அனைத்துக்கட்சி கூட்டம்!
தமிழ்நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைமுறையில் இருந்து வருகிறது. மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நீர் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. 2017ல் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவும், எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது. இருப்பிலும், இதனை மத்திய அரசு ஏற்கவில்லை.
தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு செப்டம்பர் மாதம் 13ம் தேதி சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்ததை தொடர்ந்து மீண்டும் 2022-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி சட்டசபையில் அதே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு ஆளுநர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
இருப்பினும், நீட் விலக்கு சட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் ஏப்.9ம் தேதி (இன்று) நீட் விலக்கு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று (ஏப்.9) மாலை 5 மணியளவில் சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.