பிஎம்டபிள்யூ கார் விபத்து - தலைமறைவான சிவசேனா தலைவரின் மகன் பிடிபட்டது எப்படி?
மும்பையில் பிஎம்டபிள்யூ கார் மோதி பெண் உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சிவசேனா தலைவர் மகன் மிஹிர் ஷாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பையின் வோர்லி பகுதியில் கடந்த 7ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதிகள் மீது அந்த வழியில் அதிவேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்று மோதியது. இந்த விபத்தில் பிரதீப் நகாவா கீழே குதித்து உயிர் தப்பினார். ஆனால் அவரது மனைவி காவேரி நகாவா(45) சுமார் 100 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டார்.
இதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காவேரி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்து ஏற்படுத்திய பிஎம்டபிள்யூ காரை வோர்லி போலீஸார் கைப்பற்றினர்.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று மும்பை அருகே விராரில் மிஹிர் ஷாவை மும்பை போலீசார் கைது செய்தனர். இரண்டு நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் இருந்த போலீசார் அணைத்து வைக்கப்பட்ட அவரது மொபைலை கண்காணித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து திடீரென அவரது மொபைல் போன் ஆன் செய்யப்பட்டதை அறிந்த போலீசார், அதன் டவர் லொகேஷனை வைத்து அவரை கைது செய்துள்ளனர்.