திருமங்கலத்தில் ரஜினிகாந்த் சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட கழுகு சிலை!
திருமங்கலத்தில் 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் ஆன கழுகு சிலை, ரஜினியின் முழு உருவ சிலை முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வரும் கார்த்திக் (50) என்பவர் கடந்த பல ஆண்டுகளாக நடிகர் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, தான் வசிக்கும் வீட்டின் இரண்டு அறைகள் முழுவதும் ரஜினி நடித்த திரைப்படங்களில் உள்ள காட்சிகளையும், அவர் இருக்கும் புகைப்படங்களையும் சுவர் முழுவதும் ஒட்டியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினாலான ரஜினியின் முழு உருவ சிலையை பிரதிஷ்டை செய்து, ரஜினி கோயிலாக வடிவமைத்து நாள்தோறும் 6 வகையான அபிஷேகங்கள் செய்து வழிபடுவதுடன், ரஜினியின் பிறந்தநாள் மற்றும் திருமண நாளின் போது அவருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறார்.
இதையும் படியுங்கள் : “ஆணவம் அதிகமாகிவிட்டதால் பாஜக எம்பிக்களின் எண்ணிக்கையை 240 ஆக ராமர் குறைத்துவிட்டார்” – ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேச்சு!
இன்று (ஜூன் - 14) 50 கிலோ எடை கொண்ட கருங்கல்லினாலான கழுகு சிலை செய்து, ரஜினி சிலை முன்பு பிரதிஷ்டை செய்து யாகசால பூஜைகள் நடத்தி, ரஜினி ரசிகரான கார்த்திக் தனது குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். ரஜினிக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், அவருடன் தனது குடும்பம் சந்திக்கும் தருணம் கிடைக்க வேண்டியும் இப்பூஜைகளை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.