"தோல்விக்கு காரணம் பாஜகவின் பிரச்சாரம் தான்" - ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு
பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என மகாராஷ்டிர முதலமைச்சரும் சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மகாராஷ்ராவில் பாஜக 9 இடங்களையும், ஷிண்டே அணி 7 இடங்களையும், அஜித் பவார் அணி 1 இடத்தையும் கைப்பற்றியது. இந்தியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. இந்த நிலையில், பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷிண்டே இது குறித்து கூறியதாவது:
“எதிர்க்கட்சியினரின் தவறான பிரசாரத்தால் சில தொகுதிகளை நாங்கள் இழந்தோம். மகாராஷ்ராவில் எங்கள் கூட்டணி பாதிப்பை சந்தித்தது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்தது, மக்களிடையே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போகிறார்கள் என்றும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றும் அச்சம் நிலவியது” எனத் தெரிவித்தார்.