“என்னை வாங்கும் அளவிற்கு பாஜகவினர் உயர்ந்த சித்தாந்தம் கொண்டவர்கள் அல்ல”.. - வைரலாகும் நடிகர் பிரகாஷ் ராஜின் பதிவு!
பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணைகிறார் என செய்திகள் பரவிய நிலையில் “என்னை வாங்கும் அளவிற்கு பாஜகவினர் உயர்ந்த சித்தாந்தம் கொண்டவர்கள் அல்ல” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு எல்லாம் நிறைவடைந்து தற்போது பிரச்சாரங்களில் தீவிரமாக இறங்கியுள்ளனர். பிரச்சாரங்களின் போது அரசியல் கட்சியினர் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சித்தும் வருகின்றனர்.
நடிகர் பிரகாஷ் ராஜ் பல்வேறு சமூக பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளை தெரிவித்து வருபவர். கடந்த சில நாட்களாகவே பாஜகவையும், பிரதமர் மோடியையும் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி, ‘நாடாளுமன்ற தேர்தலில் 420 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்’ எனப் பேசியதையும் விமர்சித்திருந்தார்.
பின்னர் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் என பலர் தங்களின் எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனச் சேர்த்திருந்தனர். அப்போதும் நடிகர் பிரகாஷ் ராஜ் “மணிப்பூர் மக்கள், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் எல்லாம் உங்களின் குடும்பம்தானா?” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், அதற்கு பிரகாஷ் ராஜ் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“என்னை விலைக்கு வாங்கும் அளவிற்கு அவர்கள் சிந்தாந்த ரீதியாக உயர்ந்தவர்கள் இல்லை என்பதை அவர்கள் உணரந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே” எனக் குறிப்பிட்டுள்ளார்.