Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது!” - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

07:34 PM Dec 25, 2023 IST | Web Editor
Advertisement

இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. சம்மேளனம் கலைக்கப்படவில்லை, அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

Advertisement

2022-ஆம் ஆண்டு இறுதியில் அப்போதைய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சிங்கின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போராடியதை அடுத்து கடும் அழுத்தம் ஏற்பட்டதால், பிரிஜ் பூஷன் சிங் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கடந்த டிச.21ஆம் தேதி அவரது ஆதரவாளரான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வானதைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதந்த சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தில் இருந்தே விலகுவதாக கண்ணீர்மல்க அறிவித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியா தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் தனது பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் நீரஜ் சோப்ரா போன்ற விளையாட்டு வீரர்கள் பேசவேண்டும் என்று கூறியிருந்தார்.

இத்தகைய தொடர் அழுத்தங்களை அடுத்து இந்திய மல்யுத்த சம்மேளனத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்காக மல்யுத்த சம்மேளனம் தொடர்பாக பாஜக பொய் செய்தியைப் பரப்புகிறது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இந்திய மல்யுத்த சம்மேளனம் கலைக்கப்பட்டதாக பாஜக பொய் செய்தியைப் பரப்பி வருகிறது. சம்மேளனம் கலைக்கப்படவில்லை, அதன் செயல்பாடுகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இதன்மூலம் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முடியும். பாதிக்கப்பட்ட பெண்களின் குரலை ஒடுக்குவதற்காக இந்த அளவிற்கு செல்ல வேண்டுமா? நாட்டிற்கு பெருமையைத் தேடித் தந்த மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்.பி.யின் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினால், அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை வாபஸ் வாங்குவதற்காக அளிக்கப்பட்ட வாக்குறுதியை உள்துறை அமைச்சர் அமித் ஷா மறந்துவிட்டார்.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் பாஜக எம்.பி. அகம்பாவத்தின் உச்சத்துக்கே சென்று, அடுத்த தேசியப் போட்டிகள் அவரது சொந்த ஊரில், அவர் படித்த கல்லூரி மைதானத்தில் நடத்துவதற்கு முடிவு செய்துள்ளார். இத்தகைய அநீதிகளால் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் மல்யுத்தத்தை விட்டே விலகுவதாக அறிவித்துள்ளார். எங்கெல்லாம் பெண்கள் தாக்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் இந்த அரசு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னுக்கு வருவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களை துன்புறுத்தி வருகின்றனர். இவை அத்தனையையும் பெண்களும், நாட்டு மக்களும் பார்த்து வருகின்றனர். இவ்வாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Tags :
Bajrang PuniaBrij Bhushan Sharan SinghIndianews7 tamilNews7 Tamil UpdatesPadma ShriPriyanka Gandhi VadraProtestSakshi MalikSexual harassmentVirender SinghWFIWrestlersWrestlingWrestling FederationWrestling Federation of India
Advertisement
Next Article