"ஹரியானாவின் புதல்வனான என்னை பாஜக துன்புறுத்தியது" - #ArvindKejriwal
ஹரியானாவின் புதல்வனான என்னை பாஜக துன்புறுத்தியது என ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
ஹரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் பல விதமான வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். அந்த வகையில், ஆம் ஆத்மி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தாப்வாலி பேரவைத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இப்பிரச்சாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது, “கெஜ்ரிவாலை திருடன் என்று சொன்னால் ஒட்டுமொத்த உலகமும் நம்பாது. இந்த சூழலில், முதலமைச்சர் பதவியை துறந்துவிட்டு, நான் நேர்மையானவன் என கருதினால் என்னை மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுங்கள் என்று டெல்லி மக்களிடம் கேட்டுகொண்டுள்ளேன். மக்கள் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் மட்டுமே நான் மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமருவேன்.
ஹரியானாவின் புதல்வனான என்னை பாஜக துன்புறுத்தியது. ஆம் ஆத்மி ஆதரவின்றி எந்தவொரு கட்சியாலும் ஹரியானாவில் ஆட்சி அமைக்க முடியாது. ஹரியானாவில் ஆம் ஆத்மி ஆதரவுடன் எந்த கட்சி அரசு அமைத்தாலும் இங்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவதை ஆம் ஆத்மி உறுதி செய்யம்.”
இவ்வாறு ஆம் ஆத்மி தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.