”முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா”- எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 21ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று முக்கியமான மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, அரசியலமைப்பு மசோதா (130ஆவது திருத்தம்), யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அவற்றில் இந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2019 ஆனது, அதன் 54-வது பிரிவில் திருத்தம் கோருகிறது.
இதன்படி, பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக 30 நாள்கள் சிறை வைக்கப்பட்டால், 31 ஆவது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவிநீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட வடிவை வழங்குகிறது.
இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் எதிர்க்கட்சிகள் மசோதாவின் நகல்களை கிழித்து அமித்ஷாவின் முன் தூக்கியெறிந்தனர். தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனைடையே உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாக்களை ஆய்வு செய்ய ஒரு கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்படும் என்று கூறினார்.
தொடர்ந்து AIMIM இன் அசாதுதீன் ஒவைசி, காங்கிரஸின் மணீஷ் திவாரி கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இந்த மசோதாவானது சட்டம் அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என்று கூறி பேசினர்.