”மூன்றாம் தர அரசியல்வாதி போலப் பேசினார் தலைமை தேர்தல் ஆணையர்”- இந்தியா கூட்டணி தலைவர்கள் குற்றசாட்டு!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர், கடந்த மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக அரசு தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். அத்துடன் கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக சில‘ஆதாரங்களையும்’ அவர், வெளியிட்டாா்.
இந்த இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகளின் குற்றாச்சாட்டுகளை மறுத்தார். மேலும் அவர், குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாள்களுக்கு ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், ”நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்,வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து எதிர் கட்சிகளை கேள்வி கேட்கிறது தேர்தல் ஆணையம்.ஆனால் பீகாரில் வாக்காளர் தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் அமைதியாக இருந்தது, மக்களவை மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்களுக்கு இடையில் புதிதாக 70 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய போது தேர்தல் ஆணையம் அவர்கள் அமைதியாக இருந்தனர். இது பாரபட்சமாக நடக்கும் அதிகாரிகளின் கீழ் தேர்தல் ஆணையம் உள்ளது என்பதை தெளிவாக காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
அடுத்து பேசிய சி.பி.எம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ், “தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் குறைந்தபட்சமாக ஒரு உண்மையை கூறியுள்ளார் , கோடிக்கணக்கான மக்கள் தெருக்களில் இருக்கிறார்கள், அவர்களுக்கு வீடுகள் இல்லை என்று அவர் கூறினார். பெற்றோர் இல்லாத கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள்.எனவே, நாடு இவ்வளவு வளங்களையும், பணத்தையும் மிச்சப்படுத்த தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதே சிறந்த வழியா ? ஒரு அரசியல் கட்சியின் "B" Team-ஆக இருக்கும் இதுபோன்ற அமைப்பை நடத்துவதற்கு நாம் ஏன் இவ்வளவு வரி செலுத்த வேண்டும்?. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மூன்றாம் தர அரசியல்வாதியைப் போலப் பேசினார்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, “பீகாரில் நீக்கம் செய்யப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களையும் வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு குறித்து தேர்தல் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.பீகாரில் அவசர அவசரமாக சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் மேற்கொள்ள என்ன காரணம் ? புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது ஏன் அசாதாரணமாக குறைவாக உள்ளது? இந்தப் பிரச்சனை அரசியல் கட்சிகளை குறித்தது அல்ல மாறாக நாட்டின் சாமானிய மக்களைப் பற்றியது” என்றார்.