#BiggBoss8 | ஆள்மாறாட்ட வேலை... சம்பவம் செய்த சௌந்தர்யா!
ஆள்மாறாட்ட போட்டியில் அசத்தலாக நடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் சௌந்தர்யா.
மக்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 8 கடந்த 6ஆம் தேதி தொடங்கியது. தொகுப்பாளர் தொடங்கி போட்டியின் அம்சங்கள் என பல மாற்றங்கள் இந்த சீசனில் செய்யப்பட்டுள்ளன. இந்த சீசன் முழுவதும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் தான் போட்டி. இந்த சீசனை முதல் முறையாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே சாச்சனா சில காரணங்களால் வெளியேற்றப்பட பின், மீண்டும் வீட்டிற்குள் அழைத்து வரப்பட்டார். தற்போது வரை ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என 3 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகியுள்ளனர்.
தொடர்ந்து ஒவ்வொரு நாளும் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 21ஆம் நாளான நேற்று ஆள்மாறாட்டம் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து காட்ட வேண்டும். தாங்கள் சுட்டிக்காட்ட விரும்பும் செயலை இதன்மூலம் அவர்கள் நடித்துக் காண்பித்து சுட்டிக்காட்டலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இந்த ஆள்மாறாட்டம் போட்டி நடைபெறுவது வழக்கம்.
அந்தவகையில் இம்முறை ஆள்மாறாட்டம் போட்டி நடைபெற்றது. இதில் சுனிதாவைப் போன்று உடை, உடல் பாவனைகளை மாற்றிக்கொண்டு சௌந்தர்யா நடித்து காண்பித்தார். இதேபோன்று அன்ஷிதாவாக ஜாக்குலினும், சௌர்ந்தர்யாவாக ஆர்.ஜே. ஆனந்தியும், ஜாக்குலினாக அன்ஷிதாவும் நடித்தனர்.
இவர்களின் நடிப்பு பிக்பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளர்களையும் வெகுவாகக் கவரந்தது. குறிப்பாக சுனிதாவைப் போன்று பாஸ் லேடியாகவும், மேக்கப் போட்டுக்கொண்டும், அழுதுகொண்டும் சௌந்தர்யா நடித்தது பலரைக் கவர்ந்தது. உடன் நடித்த ஜாக்குலினும் மலையாள பாணியில் தமிழ் பேசி அன்ஷிதாவாக நடித்து சௌந்தர்யாவுக்கு ஈடு கொடுத்தார்.
ஆண்கள் அணியில் அருணைப் போன்று சத்யாவும், ரஞ்சித்தைப் போன்று முத்துக்குமரனும் நடித்ததை விட, சௌந்தர்யா நடித்தது நகைப்பாகவும், தத்ரூபமாகவும் இருந்ததாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதேபோன்று ஜெஃப்ரியாக ரஞ்சித்தும், தீபக்காக ஜெஃப்ரியும், சத்யாவாக அருணும், முத்துக்குமரனாக வி.ஜே. விஷாலும் நடித்தனர்.