போஜ்ஷாலா - கமால் மௌலா மசூதி - தொல்லியல் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
போஜ்ஷாலா - கமால் மௌலா மசூதியின் தொல்லியல் துறை ஆய்வுக்கு தடை விதிக்க இயலாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ளது போஜ்ஷாலா கமால் மௌலா மசூதி. இந்த மசூதியில் சுமார் 800 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த கட்டடம் அமைந்துள்ள இடம் இந்து கோயிலுக்கு சொந்தமானது என்றும், கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்றும் நீதிக்கான இந்து முன்னணி எனும் அமைப்பு கூறி வருகிறது. இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்திருந்தது.
அதில், 14ம் நூற்றாண்டில் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக்காலத்தில் இங்கு இருந்த சரஸ்வதி கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டிருக்கிறது. எனவே இந்திய தொல்லியல் துறை இந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும். இங்கு மீண்டும் சரஸ்வதி சிலை நிறுவப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதி கட்டிடத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி உத்தரவிட்டது.
மேலும், தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை சமர்பித்த பிறகு உச்சநீதிமன்ற அனுமதியின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், தொல்லியல் ஆய்வு நடைபெறும் இடங்களில் அதன் தன்மையை மாற்றும் வகையில் எந்த ஆய்வும் மேற்கொள்ளக் கூடாது என்று தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஞானவாபி மசூதியின் சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில் இந்த போஜ்ஷாலா மசூதி பிரச்னை எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.